×

நெற்பயிரில் மகசூலை பாதிக்கும் குலைநோய் தாக்குதல் அதிகரிப்பு: இணை இயக்குநர் ஆலோசனை

 

சிவகங்கை, டிச.2: நெல் பயிரில் குலை நோய் தாக்குதலை தடுக்க வேளாண் துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 1,70,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பயிர்கள் 30 முதல் 50 நாள் வயதுள்ள பயிராக உள்ளது. தற்போது நிலவி வரும் பகல் நேர குறைந்த வெப்ப நிலை மற்றும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த கால நிலை காரணமாக பயிர்களில் குலைநோய் தாக்கம் வரவாய்ப்புள்ளது.

குலை நோய் தாக்கினால் அதிகமான மகசூல் இழப்பு ஏற்படும். பயிரில் உள்ள இலைகள், தண்டு, குருத்து உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் இந்நோயால் பாதிக்கப்படும். இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய திட்டுக்களை உருவாக்கும். கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர், மணிகள் சுருங்கி காணப்படும்.

பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால் வெண்கதிர் அறிகுறி தோன்றும். குலை நோய் தாக்குதலை தடுக்க அதிக தழைச் சத்து உரமிடுவதை தவிர்க்க வேண்டும். தழைச் சத்து உரத்தை மூன்றாகப் பிரித்து இடவேண்டும். வரப்பில் இருக்கும் களைகளை அழிக்க வேண்டும். மேலும் மருந்துகள் மூலம் குலை நோய் தாக்குதலை தடுக்கும் விபரங்களை சம்பந்தப்பட்ட வாட்டார வேளாண் அலுவலகங்கள் மூலம் அறியலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நெற்பயிரில் மகசூலை பாதிக்கும் குலைநோய் தாக்குதல் அதிகரிப்பு: இணை இயக்குநர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Department of Agriculture ,Sivaganga… ,Dinakaran ,
× RELATED மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது எப்படி?